இந்தியா

இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசுதான் மோடி: வெங்கய்ய நாயுடு புகழாரம்

நிஸ்துலா ஹெப்பர்

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய வெங்கய்ய நாயுடு, ‘இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த பரிசு நரேந்திர மோடி’ என்று புகழாரம் சூட்டினார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று (ஞாயிறு) வெங்கய்ய நாயுடு புதுடெல்லியில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு மட்டுமல்ல பிரதமர் மோடி, ‘ஏழைகளின் மீட்பர்’ என்றும் ஒரு கூடுதல் புகழாரத்தை சூட்டினார் வெங்கய்ய நாயுடு.

இதோடு, ‘Modifier of developing India’ என்பதே மோடி என்ற பெயரின் விரிவாக்கம் என்றும் புகழ்ந்தார் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

“பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் தற்போது வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ளது. லண்டனில் அவருக்கு மெழுகு சிலை திறக்கப்படவுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக விதந்தோதப்படும் தலைவராவார். ட்விட்டரில் 18 மில்லியன் பேர்களும் பேஸ்புக்கில் 32 மில்லியன் பேர்களும் மோடியை பின் தொடர்கின்றனர்” என்றார்.

அரசியல் தீர்மானத்தின் போது அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடுவின் இத்தகைய புகழாரம் குறித்து எதுவும் கூறவில்லை, ராஜ்நாத் சிங், ‘நான் வெங்கய்ய நாயுடு பேசியதை கேட்கவில்லை’ என்று முடித்துக் கொண்டார்.

காங்கிரஸில் இத்தகைய தனி மனித வழிபாட்டை பாஜக இதற்கு முன்பாக வெறுப்புடன் விமர்சித்து வந்தது, காங்கிரஸ் தலைவர் டி.கே.பரூவா ‘இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா’ என்று அடிக்கடி கூறிவந்ததை பாஜக இகழ்ச்சியுடனேயே விமர்சித்து வந்தது இதனுடன் தொடர்புறுத்தி நோக்கத்தக்கதாகும்.

SCROLL FOR NEXT