இந்தியா

கர்த்தார்பூர் பாதை இன்று திறப்பு: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

செய்திப்பிரிவு

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் பிரிக்கப்படாத இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் தனதுகடைசி ஆண்டுகளைக் கழித்தார். இப்போது அந்தப் பகுதி பாகிஸ்தானில் உள்ளது. அவரது நினைவாக அமைக்கப்பட்ட குருத்வாரா பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ளது.

அந்த குருத்வாராவுக்கு சீக்கியர்கள் சென்று வழிபட வசதியாக இருநாடுகளும் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்த்தார்பூர் குருத்வாராவுக்கு பாதை அமைத்து அது 2019-ம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. விசா இல்லாமல் சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி கர்த்தார்பூர் பாதையை மூடுவதாக இந்தியா அறிவித்தது. இப்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மேலும்வெள்ளிக்கிழமையன்று குருநானக் பிறந்த நாளான குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘சீக்கிய மதத்தினர் வழிபட வசதியாக கர்த்தார்பூர் பாதை புதன்கிழமை (இன்று) மீண்டும் திறக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.-பிடிஐ

SCROLL FOR NEXT