கடந்த தேர்தலை விட இடங்கள்குறைந்தாலும் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்என்று ஏபிபி - சிவோட்டர் - ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைத்தல், வேட்பாளர்கள் தேர்வு என பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக உள்ளன.
அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில்,. ஏபிபி - சிவோட்டர் - ஐஏஎன்எஸ் 72 ஆயிரம் பேரிடம் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் முதல் வாரம் வரை கருத்துக்கணிப்பு நடத்தியது.
பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடந்தத் தேர்தலை விட அந்தக் கட்சி குறைந்த இடங்களையே இம்முறை பெறும் என்று தெரியவந்துள்ளது.
பாஜக கடந்த தேர்தலில் 41.4 % வாக்குகளைப் பெற்றது. ஆனால் இம்முறை அந்தக் கட்சிக்கு 40.7 % வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
சமாஜ்வாதி கட்சி 2017-ல் 23.6% வாக்குகளைப் பெற்றது. இம்முறை அந்தக் கட்சிக்கு 31.1% வாக்குகள் கிடைக்கும். அதேநேரத்தில் கடந்த தேர்தலில் 22.2% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை 15.1 % வாக்குகள் கிடைக்கும். 2017-ல் 6.3% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 8.9% வாக்குகள் கிடைக்கும்.
இடங்களைப் பொறுத்தவரையில் 2017-ல் பாஜக 325 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால்இம்முறை சுமார் 100 இடங்களுக்கும் அதிகமான இடங்களை பாஜகஇழக்கிறது. அந்தக் கட்சி வரும் தேர்தலில் 213 முதல் 221 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிகிறது.
அதேநேரத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் இம்முறை சமாஜ்வாதி கட்சிக்கு 152 முதல் 160 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 16 முதல் 20 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 10 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிகிறது.
யோகிக்கு 49 சதவீதம் ஆதரவு
அதே நேரத்தில் மீண்டும் முதல்வராக யோகி ஆதித்யநாத் வர மக்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. கருத்துக்கணிப்பின்போது 51.9% மக்கள் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரக்கூடாது எனதெரிவித்துள்ளனர். 48.9 சதவீத மக்கள், அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 31.4 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 15.6 சதவீதம் பேரும்காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்திக்கு 4.5 சதவீதம்பேரும் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.