இந்தியா

கர்தார்பூர் வழித்தடம் நாளை மீண்டும் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு; பஞ்சாப் தலைவர்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

கர்தார்பூர் வழித்தடத்தில் நாளை முதல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தமது கடைசி காலத்தில் கர்தார்பூர் பகுதியில் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த பகுதியில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு
தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும்.

தேரா பாபா நானக்கில் உள்ள சர்வதேச எல்லையான ஜீரோ பாயிண்டில் உள்ள ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவால் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூரை ஆண்டு முழுவதும் எளிதான முறையில் பார்வையிட வசதியாக, தேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லை வரையிலான ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒப்பதல் அளிக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் 16-ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘ஸ்ரீ கர்தாபூர் சாஹிப் கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்தி தலமாகும். ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பிரதமர் மோடி அரசின் முடிவு சீக்கிய சமூகத்தின் மீதான அதன் அன்பை காட்டுகிறது. மோடி அரசின் இந்த முடிவால் ஏராளமான சீக்கிய யாத்ரீகர்கள் பயனடைவார்கள்’’ எனக் கூறினார்.

ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் வழியாக யாத்திரை செல்வதற்கு, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு பஞ்சாப் முதல்வர் சன்னி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT