இந்தியா

டெல்லி காற்று மாசு: அவசரக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

செய்திப்பிரிவு

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை உலுக்கி வரும் காற்று மாசை கட்டுப்படுத்துவற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்தது.

இதனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் அண்மை மாநிலங்களில் நிலவும் காற்று மாசு பிரச்சினையை தீர்க்க அவசர கூட்டத்திற்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இக்கூட்டத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் அத்தியாவசியமற்ற போக்குவரத்து, கட்டுமான பணிகள், போக்குவரத்து நெரிசல், பயிர்க்கழிவுகள் எரித்தல் போன்றவையே காற்று மாசிற்கு முக்கிய காரணமாகும் என்பதால் அதனை சீர் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

காற்று மாசை கட்டுப்படுத்த கட்டுமானத்தை நிறுத்துதல், அத்தியாவசியமற்ற போக்குவரத்தை நிறுத்துதல், வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவைகள் தொடர்பாக அவசரமாக முடிவெடுக்கப்படலாம்.

பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT