இந்தியா

பலத்த மழையால் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவு; அனுமதி 30,000; முன்பதிவு 8 ஆயிரம்

செய்திப்பிரிவு

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சபரிமலையில் ஒரு நாளைக்கு 30,000 பேர் வரை தரிசனம் செய்ய அனுமதியுள்ளபோதிலும் முதல் நான்கு நாட்களில் 8000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருவர். சபரிமலையில் மண்டல பூஜை சீசன் டிசம்பர் 26 வரை நீடிக்கும். பின்னர் மகரவிளக்கு விழாவுக்காக டிசம்பர் 30-ம் தேதி கோயில் திறக்கப்படும்.

2022 ஜனவரி 20 வரை தொடரும் மகர விளக்கு வழிபாடு தொடரும். பக்தர்கள் தரிசனம் செய்ய ஜனவரி 19 வரை அனுமதிக்கப்படும். டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும். ஜனவரி 14-ம் தேதி வரும் மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியிருத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வரிசை முறை மூலம் இன்று முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

கரோனா காலம் தவிர கேரளாவின் தெற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் என்ற பீதி காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. பலர் முன்பதிவு செய்தபோதிலும் வரவில்லை. ஒரு நாளைக்கு 30,000 பேர் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல் நான்கு நாட்களில் 8000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் செல்ல முடியாவிட்டால், நவம்பர் 18 முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு அதே டிக்கெட்டுகளுடன் தரிசனம் செய்யலாம்.

பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வியாழக்கிழமை வரை பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஸ்பாட் புக்கிங் வியாழக்கிழமை வரை கிடைக்காது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் மிகச் சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. பம்பை, சன்னிதானம், நிலக்கல் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT