இந்தியா

போதிய உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு விரைவில் அனுமதி

செய்திப்பிரிவு

போதிய உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் அதாவது சூரியன் அஸ்தமனத்துக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.

என்றாலும் கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகத் துக்குரிய மரணம் போன்ற வழக்கு களுக்கு அனுமதி வழங்கப்படாது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை நடத்துவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் ஒரு தொழில்நுட்பக் குழு அண்மையில் ஆய்வு செய்தது.

அப்போது, ஏற்கெனவே சில மருத்துவ நிறுவனங்கள் இரவுநேர பிரேதப் பரிசோதனை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றம், குறிப்பாக பிரேதப் பரிசோதனைக்கு தேவையான வெளிச்சம் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளதால் இரவுநேர பிரேதப் பரிசோதனை தற்போது மிகவும் சாத்தியமாகி யுள்ளது. எனவே முறையான உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவமனைகளில் இரவுநேர பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக் கலாம் என அப்போது முடிவு எடுக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு விரைவில் இதற்கான அனுமதி வழங்க உள்ளது.

ஆதாரங்கள் எதுவும் நீர்த்துப் போகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனை பொறுப்பாளரால் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும். உடல் உறுப்பு தானத்துக்கான பிரேதப் பரிசோதனைகளை விரைவுபடுத்துவதும் இந்த அனுமதிக்கான நோக்கமாகும்.

என்றாலும் கொலை, தற் கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மரணம் போன்ற வழக்குகளில் இரவுநேர பிரேதப் பரிசோதனைக்கு அனு மதி இல்லை. இரவுநேர பிரேதப் பரிசோதனை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவது கட்டாயம் ஆகும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஆராயவும், எதிர்கால சட்ட நோக் கங்களுக்காகவும் இந்த வீடியோ பதிவு பாதுகாக்கப்படும்.

இவ்வாறு மத்திய அரசு வட் டாரங்கள் தெரிவித்தன.

இயற்கை வெளிச்சத்தில் பிரேதப் பரிசோதனை

சென்னை: இயற்கை வெளிச்சத்தில் பிரேதப் பரிசோதனை அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இயற்கை வெளிச்சம் இருக்கும் போது, பிரேதப் பரிசோதனை செய்தால் தான் இறப்புக்கான காரணம், நேரம் போன்றவற்றை கண்டறிய முடியும். சூரியன் மறைவுக்கு பின்னர் இயற்கை வெளிச்சம் இருக்காது.

அந்த நேரத்தில் தோலின் நிறம் மாறக்கூடும். திசுக்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படும். அப்போது, பிரேதப் பரிசோதனை செய்தால் இறப்பு தொடர்பான முழுமையான தகவல் கிடைக்காது. பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் உடலும் கூட மறுநாள் தான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டத்தில் சிறுவன் உயிரிழந்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க சிறப்பு அனுமதியுடன் சிறுவனின் உடல் இரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதுபோல், சிறப்பு அனுமதியுடன் இந்தியாவில் இரவில் சில பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT