இந்தியா

மல்லய்யா மீது மோசடி வழக்கு: அமலாக்கத் துறை அதிரடி

தேவேஷ் கே.பாண்டே

நிதிமுறைகேடுகள் தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லய்யா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ரூ.900 கோடி கடனை திருப்பி அளிக்காமல் வேண்டுமென்றே ஏமாற்றியதாக எழுந்த விவகாரத்தில் சிபிஐ நடத்திய விசாரணை அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸின் மிக மோசமான நிதிநிலவரங்கள் குறித்து தணிக்கைத் துறை எதிர்மறையான விவரங்களை அளித்தது தெரிந்தும் ஐடிபிஐ வங்கி கோடிக்கணக்கில் மல்லையாவுக்கு கடன் வழங்கியது சிபிஐ விசாரணையில் அம்பலமானது.

ஐடிபிஐ-யும் அங்கம் வகிக்கும் 17 வங்கிகள் கூட்டமைப்பிடமிருந்து வாங்கிய கடனை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று சிபிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற 12 வங்கிகள் தங்களிடமிருந்து வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடனை தராமல் போக்குக் காட்டி வந்த விஜய் மல்லையாவை கைது செய்து அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய மல்லையா மற்றும் 9 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது அமலாக்கத் துறை விஜய் மல்லையா மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், தனது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை டியாஜியோ நிறுவனத்திற்கு மல்லையா விற்ற வகையில் அவருக்கு கிடைக்கும் ரூ.515 கோடி தொகையை கொடுத்த கடனை திரும்பப் பெற பயன்படுத்திக் கொள்ள உரிமை கோரி பாரத ஸ்டேட் வங்கி வைத்திருந்த கோரிக்கையையும் கடன் மீட்பு தீர்ப்பாயம் விரைவில் பரிசீலித்து முடிவு அறிவிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT