உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நடத்தப்படும் விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பார் என்று உச்ச நீதிமன்றம் அளித்த ஆலோசனையை உத்தரப் பிரதேச அரசு ஏற்றுக்கொண்டது.
மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரின் மகனும் சென்ற காருக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்போதுதான் கலவரம் நடந்துள்ளது. விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக அமைச்சர் மகன் ஆஷஸ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டதால், முக்கியத்துவம் கருதி ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயிரக்கணக்கில் சாட்சிகள் இருந்தபோது அதில் சிலரின் வாக்குமூலத்தை மட்டும் பதிவு செய்துள்ளீர்கள் என்று உ.பி. அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த மாதம் 3-ம் தேதி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர்.
அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷஸ் மிஸ்ரா உள்பட 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாகவும், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இதில் உ.பி. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜராகினார்.
அப்போது நீதிபதிகள் அமர்விடம், உ.பி. அரசு வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே கூறுகையில், “வழக்கை உங்கள் பொறுப்பில் விடுகிறோம். யாரை வேண்டுமானாலும் வழக்கை விசாரிக்க நியமிக்கலாம். எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது வெளிமாநிலத்தவர் யாரையும் விசாரணைக்கு நியமிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, “பஞ்சாப், ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அல்லது வேறு நீதிபதிகள் யாரேனும் நியமிக்கப்படுவார்கள். அதுகுறித்து அவர்களிடம் ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தது.
அதற்கு ஹரிஸ் சால்வே, “விசாரணையைக் கண்காணிக்க யாரை வேண்டுமாலும் நியமிக்கலாம். ஆனால், அந்த முன்னாள் நீதிபதி உ.பி.யைச் சேர்ந்தவரா அல்லது வேறு மாநிலத்தவரா என்பதைக் கூறுங்கள். எங்கள் நோக்கம் யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பதுதான். எந்த மாநிலம் என்பது முக்கியமல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி நியமனத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “லக்கிம்பூர் விசாரணையை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிதான் கண்காணிப்பாளர். விரைவில் யார் என அறிவிப்போம். அதுமட்டுமல்லாமல் உ.பி.யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல் தேவை. இதில் உ.பி.யைப் பூர்வீகமாகக் கொள்ளாதவர்களைதான் சிறப்பு விசாரணைக் குழுவில் சேர்க்க வேண்டும்.
தற்போது விசாரணைக் குழுவில் இருப்போரில் துணை ஆய்வாளர் அளவில் இருப்போர் கூட லக்கிம்பூர் கெரி காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆதலால் அந்தப் பட்டியலை வரும் 16-ம் தேதிக்குள் (நாளை) ஒப்படைக்க வேண்டும் வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்'' எனத் தெரிவித்தது.