ரயில் சேவைகள் கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததுபோல் கொண்டுவரப்பட உள்ளதையடுத்து, டிக்கெட் முன்பதிவில் பல்வேறு மாற்றங்கள், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்வதற்காக 14-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை இரவு நேரத்தில் மட்டும் 6 மணி நேரம் முன்பதிவு சேவை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்படத் தொடங்கியபின் கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. ஜூனில் இருந்து குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமே சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன.
கரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து, ஊரடங்கைத் தளர்த்தி படிப்படியாகச் சிறப்பு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து, சிறப்பு ரயில்கள் அனைத்தையும், வழக்கமான ரயில்களாக, நடைமுறையில் உள்ள ரயில் கால அட்டவணைப்படி இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தச் சீரமைப்புப் பணிக்காக இரவு நேரத்தில் மட்டும் ரயில் முன்பதிவை 6 மணி நேரம் நிறுத்திவைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஏராளமான பழைய ரயில்கள், தற்போது நடப்பில் இருக்கும் பயணிகள் ரயில்கள் மெயில்களாகவும், எக்ஸ்பிரஸ்களாகவும் மாற்றப்பட உள்ளன. இது மிகவும் கவனத்துடன் செய்யும் பணியாகும். ஆதலால், இரவு நேரத்தில் குறைந்தபட்சமாக ரயில் டிக்கெட் சேவைகள் நிறுத்தப்படும். நவம்பர் 14-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதிவரை இரவில் மட்டும் 6 மணி நேரம் ரயில்வேயில் முன்பதிவு, கரண்ட் புக்கிங், டிக்கெட் கேன்சல் போன்ற சேவைகள் இயங்காது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் புறப்படும் ரயில்களுக்கு ரயில்வே ஊழியர்கள் முன்கூட்டியே அட்டவணையைத் தயார் செய்து, ரயில்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ரயில் டிக்கெட் முன்பதிவு மட்டுமே 6 மணி நேரம் பாதிக்கப்படும். ஆனால், ரயில்வே விசாரணை எண் 139 வழக்கம் போல் செயல்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.