இந்தியா

ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற கேரள பாதிரியாரை மீட்க கோரி தேவாலயங்களில் பிரார்த்தனை

இரா.வினோத்

ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் பாதிரியாருக்காக கர்நாடகாவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் டாம் உழுன்னாலில் (56) பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியவர். சமூக சேவையில் கொண்ட ஆர்வத்தால் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கோலார் தங்கவயலில் உதவி பங்கு தந்தையாக இருந்தபோது, ஏராளமான தமிழர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிரியார் டாம் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏமனில் முதியோர்கள், அகதிகள், நோயாளிகளுக்கு தொண்டாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 4-ம்தேதி தொண்டு இல்லத்துக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 4 கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பாதிரியார் டாம் உட்பட 15 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

மிரட்டல்

இந்த சூழலில் புனித வெள்ளியான நேற்று முன் தினம் பாதிரியார் டாமை ஐஎஸ் தீவிரவாதிகள் சிலுவையில் அறைய இருப்பதாக பிரான்ஸை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது.

இந்த தகவலை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் தங்களது பக்கங்களில் பகிர்ந்தனர். மேலும் பாதிரியார் டாமை காப்பாற்றக் கோரியும், அவரது உடல் நலனுக்காகவும் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

சுஷ்மா நம்பிக்கை

ஏமனில் கடத்தப்பட்ட பாதிரியார் டாமை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதனால் அவர் பத்திரமாக மீட்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT