ஷொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தனது செயல்பாடுகள் பிடிக்காததால்தான் தனக்கு நீதிபதி பதவி வழங்கப்படுவதை மத்திய அரசு நிராகரித்ததாக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் நிகழ்ந்த ஷோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்னை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. என்னை மீண்டும் நீதிபதி பதவி நியமனத்திற்கு பரிந்துரைக்க வேண்டாம். இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவிற்கு எழுதிய 9 பக்க கடிதத்தில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஷொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் நீதிமன்றம் சார்பில் நடுநிலை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டேன். இந்த வழக்கில் நேர்மையுடனும், நியாயத்துடனும் இருந்த எனது செயல்பாடுகள் பிடிக்காததால்தான், நான் நீதிபதியாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்துள்ளது. எனினும், இதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை.
முன்னதாக கடந்த மே 15-ம் தேதி என்னை நீதிபதியாக நியமிப்பதில் தடையேதும் இல்லை என்று உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால், அதன் பிறகு என் மீது தவறு கண்டுபிடிக்கும் நோக்கத்தில் சட்டத்துறை அமைச்சகம் புதிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது.
உயர் பதவியில் இருப்பவர்களின் நெருக்குதல் காரணமாக என் மீது அவதூறான புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எனக்கு ஆதரவாக இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாமல், தனது சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்க நீதித்துறை தவறிவிட்டது.
2ஜி வழக்கில் சிபிஐ அதிகாரி களையும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கறிஞரையும் சந்திக்க வைத்ததாக என் மீது ஊடகங்களில் புகார் கூறப்பட்டுள்ளது.
இது தவறான தகவல். அப்படி எந்தவொரு சந்திப்புக்கும் எனது வீட்டிலோ அலுவலகத்திலோ நான் ஏற்பாடு செய்யவில்லை” என்று கோபால் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கருத்து கூற மத்திய அரசு மறுப்பு
மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் என்ற முறையில் கருத்து சொல்வது சரியானதாக இருக்காது. கோபால் சுப்ரமணியம் வெளிப்படையாக இது பற்றி பேசியுள்ளதற்கு என்னிடம் பதில் இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பது பதற்றமிக்க விவகாரம் என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த நியமனத்தில் அரசுக்கு பங்கு உள்ளது. மற்றபடி வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு கிடைப்பதை தடுக்க சிபிஐ மூலமாக தனக்கு எதிராக குற்றம் சுமத்த முயற்சிக்கிறது நரேந்திர மோடி அரசு என கோபால் சுப்ரமணியம் புகார் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு இவ்வாறு தெரிவித்தார் ரவிசங்கர் பிரசாத்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசை விமர்சிப்பது பற்றி பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத், நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டபோது நீதித்துறையுடன் மோதியதை காங்கிரஸ் நினைவில் கொள்ளட்டும். 40 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு என்றார்.
ஷொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமித் ஷா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு துணைபுரிந்தவர் கோபால் சுப்ரமணியம்