மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ உயரதிகாரி மற்றும் வீரர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் அசாம் ரைபில்ஸ் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை 10 மணியளவில், மணிப்பூர் மாநிலத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சூராசந்த்பூர் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலில், கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி, அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 6 பேருமே இந்தத் தாக்குதல் படுகொலையாகினர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.