நான் ஒரு விவசாயி, என்னுடைய சகோதரர் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஏழை விவசாயிகளால் எவ்வாறு வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை வாங்க முடியும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார்.
ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயல்களில் இருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்யா துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமான் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு அமர்வில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசு சார்பில் ராகுல் மேரா ஆகியோர் ஆஜராகினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், சொலிசிட்டர் ஜெனரலிடம் கூறுகையில், “நான் ஒரு விவசாயி. தலைமை நீதிபதி என்.வி.ரமணா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா. வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை வடமாநிலங்களில் உள்ள ஏழை விவசாயிகளால் வாங்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.
2 லட்சம் இயந்திரங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், ஏழை விவசாயிகளால் இந்த இயந்திரங்களை வாங்க முடியாதே. வேளாண் சட்டங்கள் வந்தபின், உ.பி. பஞ்சாப், ஹரியாணாவில் வேளாண் நிலம் வைத்திருப்பது 3 ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது. இந்த இயந்திரங்களை எல்லாம் விவசாயிகள் வாங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
இந்த இயந்திரங்களை ஏன் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கிடக் கூடாது. வேளாண் கழிவுகளை எடுத்துக் காகித ஆலைக்கும், வேறு பயன்பாட்டுக்கும் ஏன் பயன்படுத்தக் கூடாது. குளிர்காலத்தில் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏன் தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது” எனக் கேள்வி எழுப்பினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், “வேளாண் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை 80 சதவீத மானியத்தில் அரசு தருகிறது” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி சூர்யகாந்த், “அப்படியென்றால் மானியத்தைத் தவிர்த்துப் பார்த்தால் இயந்திரத்தின் உண்மையான விலை என்ன என்று கணக்கிடுங்கள். விவசாயிகளால் அதை வாங்க முடியுமா எனக் கூறுகிறேன். நான் ஒரு விவசாயி, எனக்குத் தெரியும். தலைமை நீதிபதியும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கும் தெரியும், மற்றொரு நீதிபதி சகோதரருக்கும் தெரியும். எதற்கெடுத்தாலும் விவசாயிகளைக் குறைகூறுவதை ஃபேஷனாக வைத்திருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.