கோப்புப்படம் 
இந்தியா

ஆபத்தான நிலையில் காற்று மாசு; டெல்லியில் 2 நாட்கள் லாக்டவுன் பற்றிச் சிந்தியுங்கள்: உச்ச நீதிமன்றம் யோசனை

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதால், அவசரகால நடவடிக்கையாக டெல்லியில் இரு நாட்கள் லாக்டவுன் கொண்டுவந்து, காற்றின் தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயல்களில் இருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்யா துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமான் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி அரசு சார்பில் ராகுல் மேரா ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சொலிசிட்டர் ஜெனரலிடம், “டெல்லியில் எந்த அளவு சூழல் மோசமாகிவிட்டது என உங்களுக்குத் தெரியுமா? மக்கள் வீடுகளில் கூட முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த 2 நாட்கள் லாக்டவுன் கொண்டுவருவது குறித்துப் பரிசீலியுங்கள்.

காற்று மாசு அறிக்கையில், டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையிலிருந்து ஆபத்தான நிலைக்கு அடுத்த இரு நாட்களுக்குள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அடுத்த சில நாட்களில் சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எவ்வாறு காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போகிறீர்கள் எனத் தெரிவியுங்கள்” எனக் கேட்டார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

அப்போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. சிறிய குழந்தைகள் சாலைகளில் பள்ளியை நோக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளைக் காற்று மாசுவிலும், கரோனா தொற்றிலும், டெங்கு காய்ச்சலிலும் பாதிக்கப்படவைக்கப் போகிறீர்களா? அனைத்துப் பள்ளிகளையும் திறந்துவிட்டீர்கள். பள்ளிகள் அனைத்தும் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. குழந்தைகள் எதிர்காலம், அவர்களின் நுரையீரல் காற்று மாசால் பாதிக்கப்படட்டுமா” எனக் கேள்வி எழுப்பினார்.

டெல்லி அரசின் வழக்கறிஞர் ராகுல் மேரா கூறுகையில், “கடந்த அக்டோபர் 30-ம் தேதி 84 புள்ளிகள் இருந்த காற்று மாசு குறியீடு 471 புள்ளிகளாகத் தற்போது அதிகரித்துவிட்டது. நமக்குப் புகைப்பழக்கம் இல்லை. ஆனால், புகைப்பழக்கம் இல்லாதவர்கள் கூட நாள்தோறும் 20 சிகரெட்டுகள் புகைக்கும் அளவில் காற்று மாசு அதிகரித்துவிட்டது. பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தில் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு வருகிறது” எனத் தெரிவித்தார்.

அதை ஆமோதித்த துஷார் மேத்தா, “கடந்த 5 நாட்களாக ஹரியாணா, பஞ்சாப்பில் இருந்து வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “முதலில் நீங்கள் டெல்லியைக் கட்டுப்படுத்துங்கள். உங்களின் காற்று மாசு குறைக்கும் டவர்கள் செயல்படுகின்றனவா? ஒவ்வொருவரும் விவசாயிகளைக் குறை சொல்கிறீர்கள். பட்டாசு வெடித்ததைப் பற்றிப் பேசவில்லை. கடந்த 6 நாட்களாக என்ன நடந்தது? டெல்லி போலீஸார் என்ன செய்தார்கள். இது அவசரமான சூழல், அவசரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதற்கு துஷார் மேத்தா, “நாங்கள் விவசாயிகள் மீது குற்றம் கூற எந்த நோக்கமும் இல்லை. அவர்கள் தவிர்த்து காற்று மாசுக்குக் காரணங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஆமாம். அரசியலைத் தாண்டி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். காற்று மாசு அனைவருக்குமான பிரச்சினை, இதில் அரசியலுக்கு எந்த வேலையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT