தேசிய மொழியைப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சி காணும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அகில பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், "தேசிய மொழியைப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சி காணும். அதேபோல் ஜனநாயகமும் தழைத்தோங்கும்.
உங்களிடம் நான் மிகவும் பெருமிதத்துடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இன்று உள்துறை அமைச்சகத்தில் உள்ள ஒரே ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் இருக்காது.
நாங்கள் முழுவதுமாக தேசிய மொழிக்கு மாறிவிட்டோம். இது தான் இன்று நிறைய அரசுத் துறைகளின் நிலையாகவும் உள்ளது.
ஒரு தேசத்தின் நிர்வாகத் துறையில் தேசிய மொழி பயன்படுத்தப்பட்டால் தான் அந்த நாட்டின் ஜனநாயகம் வெற்றிகரமாக இருக்கும். எந்த ஒரு தேசம் தனது மொழியை இழக்கிறதோ அது தனது கலாச்சாரத்தையும் இழந்துவிடும். அதேபோல் தன் இயல்பான சிந்தனையையும் இழந்துவிடும். அவ்வாறாக சுய சிந்தனையை இழந்த தேசத்தால் சர்வதேச வளர்ச்சியில் பங்களிப்பு செய்ய முடியாது.
புதிய கல்விக் கொள்கை அனைத்து மொழிகளையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சிக்கிறது. பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கை தேசத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் தாய் மொழியில் பேசுங்கள். தாய் மொழி தான் நமது அடையாளம். அதைப் பற்றி வெட்கபட வேண்டியது ஏதுமில்லை. எனக்கு குஜராத்தி மொழியைவிட இந்தி மொழி மிகவும் பிடிக்கும்.
காந்தியடிகள் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போது அதன் தூண்களாக ஸ்வராஜ், ஸ்வதேசி, ஸ்வபாஷா ஆகிய கொள்கைகள் இருந்தன.
சுயாட்சியை நாம் அடைந்துவிட்டோம். ஆனால் சுதேசி, ஸ்வபாஷா கொள்கைகளை மறந்துவிட்டீம்.
அதனால் தான் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ராஜ்பாஷா அதாவது தேசிய மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்"
என்றார்.
முன்னதாக அவர் வாரணாசியில் கால பைரவர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர்.