இந்தியா

2002-03 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொடா நீதிமன்றம் தீர்ப்பு: 10 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு - போதிய ஆதாரங்கள் இல்லாததால் 3 பேர் விடுதலை

பிடிஐ, ஐஏஎன்எஸ்

கடந்த 2002-03 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2002 டிசம்பர் 6-ம் தேதி மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மெக்டொனால்டு உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 27 பேர் படுகாயம் அடைந்தனர். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு 2003 ஜனவரி 27-ம் தேதி வில்லே பார்லி ரயில் நிலையத்தில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் அனிதா இந்துல்கர் என்பவர் உயிரிழந்தார். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து 2003 மார்ச் 13-ம் தேதி முலந்த் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த புறநகர் ரயிலின் பெண்கள் பெட்டியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 71 பேர் காயமடைந்தனர்.

இந்த 3 குண்டுவெடிப்புகள் தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பொடா நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை நடை பெற்றது.

இந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக மொத்தம் 25 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்த னர். கொலை, நாட்டுக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொடா சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் ஆரம்பகட்ட விசாரணை யின்போது 5 பேர் உயிரிழந்து விட்டனர். 5 பேர் இன்னமும் தலை மறைவாக உள்ளனர். மீதமுள்ள 15 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்ற விசாரணையின்போது 2 பேர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 13 பேர் மீது விசாரணை தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஆர்.தேஷ்முக் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி சாகிப் நாச்சன், அடீப் முல்லா, ஹசீப் முல்லா, குலாம் கோத்தல், முகமது காமில், நூர் மாலிக், அன்வர் அலி கான், பர்ஹான் நாட், வாஷித் அன்சாரி, முசாமில் அன்சாரி ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் நதீம் பலோபா, ஹாரூண் லோஹர், அட்னன் முல்லா ஆகிய 3 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் ரோகிணி கூறியதாவது:

மூன்று குண்டுவெடிப்புகளிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தாணே மாவட்டம் பட்கா பகுதியைச் சேர்ந்த அவர்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் பிடிபட்டனர்.

1992 பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத் கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்த கும்பல் நாச வேலைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. பல்வேறு மேல்முறை யீடுகளுக்குப் பிறகு கடந்த 2014 முதல் வழக்கு விசாரணை வேகம் பெற்று இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கான தண் டனை விவரங்கள் குறித்த விவாதம் புதன்கிழமை முதல் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு ரோகிணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT