இந்தியா

கங்கனா ரணாவத்துக்கு வழங்கிய பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரணாவத் பேசுகையில் ‘‘ பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 2047-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான்’’ என்று கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடானது, அதிர்ச்சியளிக்கிறது. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வாலபாய் படேல் ஆகியோரை அவமதித்துள்ளார். பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தியுள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும் அதன் ஹீரோக்களையும் அவமதிக்காமல் இருக்க மனநல மதிப்பீடு செய்யப்பட வேண்டும்" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT