இந்தியா

சிறப்பாக செயல்படும் கோவாக்சின்: கரோனாவுக்கு எதிராக  77.8%,  டெல்டாவுக்கு எதிராக 65.2% - ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பின் தீவிரத்தை கோவாக்சின் 77.8 சதவீதம் தடுக்கிறது என்றும் டெல்டா வகை கரோனா வைரஸுக்கு எதிராக 65.2 சதவீதம் வரை தடுக்கிறது என்றும் தி லான்செட் என்ற மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் மீண்டும் உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.

கரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்டபோது கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.

டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிக்கப்பட்டது.

அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்பின் தீவிரத்தை கோவாக்சின் 77.8 சதவீதம் தடுக்கிறது என்றும் டெல்டா வகை கரோனா வைரஸுக்கு எதிராக 65.2 சதவீதம் வரை தடுக்கிறது என்றும் வேறு சில ஆய்வுகளும் தெரிவித்து இருந்தன.

இந்தநிலையில் தி லான்செட் என்ற மருத்துவ இதழ் கோவாக்சின் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 77.8 சதவீத செயல்திறன் வீதத்தைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகள் அவசியம் என்று தி லான்செட் கூறியுள்ளது.

பாரம்பரிய, செயலிழந்த வைரஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் கோவாக்சின், இரண்டு டோஸ்கள் கொடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வலுவான ஆன்டிபாடி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்று தி லான்செட் தெரிவித்துள்ளது. நவம்பர் 2020 முதல் மே 2021 வரை இந்தியாவில் 18-97 வயதுடைய 24,419 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கடுமையான, தடுப்பூசி தொடர்பான இறப்புகள் அல்லது பாதகமான நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் லான்செட் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு நான்கு வார இடைவெளியுடன் இரண்டு டோஸ்களில் கோவாக்சினைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் லான்செட் ஆய்வு காரணமாக கோவாக்சின் உலக அளவில் கூடுதல் அங்கீகாரம் பெற வாாய்ப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT