ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் ஆக முடியாத இளைஞர் ஒருவர் விடாமுயற்சியால் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், மஞ்சீரியல் மாவட்டம், பெல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவரின் மகன் சங்கீர்த் (27). இவர் சிறுவயது முதலே தனது தந்தையின் ஆசைப்படி போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என லட்சியத்தை வளர்த்துக் கொண்டார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆனார். பின்னர் தெலங்கானா அரசின் பகீரதா திட்டத்தில் உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்தார். என்றாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சப் இன்ஸ்பெக்டர் பதவிக்காக விண்ணப்பித்து, இதற்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சில விநாடிகள் தாமதமாக வந்ததால், அந்தப் பணிக்கான வாய்ப்பை இழந்தார். பிறகு பொறியாளராக பணியில் சேர்ந்ததும், மாலை வேளையில் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்துவந்தார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வந்தார்.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார் சங்கீர்த். ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகாடமியில் கடந்த வெள்ளிக்கிழமை 132 பேர் ஐபிஎஸ் பயிற்சி முடித்து வெளியில் வந்தனர். இவர்களில் சங்கீர்த்தும் ஒருவர் ஆவார். “தந்தையின் கனவை நனவாக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கையின் குறிக்கோளையும் நிறைவேற்றி விட்டேன்” என மகிழ்ச்சியுடன் கூறினார் சங்கீர்த் ஐபிஎஸ்.