திருமலையில் நேற்று புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் 9 டன் மலர்களால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, 9 டன் மலர்கள் கூடை கூடையாக திருமலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. 
இந்தியா

திருமலையில் 9 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

செய்திப்பிரிவு

திருமலையில் ஏழுமலையானுக்கு நேற்று 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பிரம் மோற்சவம் நடந்து முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம்.

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்ததால், நேற்று புஷ்ப யாகம் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு நேற்று மாலை கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத் தில் புஷ்பயாக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன.

இதில், கர்நாடகாவிலிருந்து 4 டன், தமிழகத்திலிருந்து 3 டன், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து தலா 1 டன் என மொத்தம் 9 டன் மலர்கள் வரவழைக்கப்பட்டன. ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்றவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

புஷ்ப யாக நிகழ்ச்சியால், நேற்று ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை, திருக்கல்யாண சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. இதற்கிடையில், ஏழுமலையான் கோயிலுக்கு சம்பங்கி மரம் தல விருட்சம் என தேவஸ்தானம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது.

SCROLL FOR NEXT