இந்தியா

பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல மறுத்த ஒவைசிக்கு காங். எம்.பி. ஜாவேத் அக்தர் பதிலடி

செய்திப்பிரிவு

அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தியாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த எம்பி அசாதுதிதீன் ஒவைசி, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்க மாட்டேன்’ என்று 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் காங்கிரஸ் எம்.பி. ஜாவேத் அக்தர் உட்பட 17 எம்.பி.க்கள் நேற்று கவுரவிக்கப் பட்டனர்.

மாநிலங்களவையில் நேற்று ஜாவேத் அக்தர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆவேசமாக பேசினார். ஒவைசிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல முறை, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்கினார். பின்னர் அவர் தனது கடைசி உரையில் கூறியதாவது:

‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழக்கமிட சட்டத்தில் கூறவில்லை’ என்று ஒவைசி கூறியிருக்கிறார். அதேபோல் ஷெர்வானி, தொப்பி அணிய வேண்டும் என்று கூட சட்டத்தில் கூறவில்லை. மதத்தின் பெயரால் மனிதர்களை தூக்கிலிடும் நாடுகளை போல இந்தியா மாற வேண்டுமா? அல்லது ‘லாஸ்ட் டெம்ட்டேஷன் ஆப் கிறைஸ்ட்’ என்ற திரைப்படத்தை போல இந்தியா இருக்க வேண்டுமா?

மதச்சார்பின்மையை பாதுகாப் பது என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தை பாதுகாப்பது அல்ல. மதச்சார்பின்மை இல்லாமல் ஜன நாயகம் சாத்தியமில்லை.

எனவே அதை நாம் பாது காக்க வேண்டும்.மதச்சார்பின்மை தான் நமது மிகப்பெரிய சாதனை என்று நான் நம்புகிறேன். பாரத மாதாவுக்கு ஜே என்று முழக்கமிடுவது எனது உரிமை.

இவ்வாறு ஜாவேத் அக்தர் ஆவேசமாக பேசினார்.

SCROLL FOR NEXT