செகந்தராபாத்தில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பெண் ஒருவர் தனது குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் கூறியதாவது:
செகந்தராபாத் டீச்சர்ஸ் காலனியில் வசிப்பர் வினய். இவர் பரிசுப்பொருட்கள் விற்பனை அங்காடி வைத்துள்ளார். இவரது மனைவி சரோஜா என்ற ரஜினி. இவர்களுக்கு தன்ஷிகா (7), தன்வி (3) என இரண்டு பெண் குழந்தைகள்.
சரோஜாவுக்கு தனது கணவர் வினய் மீது சந்தேகம் இருந்துள்ளது. மூத்த மகள் தன்ஷிகாவை பாலியல் ரீதியாக வினய் துன்புறுத்தியதாக சந்தேகித்திருக்கிறார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் தனது மூத்த மகள் தன்ஷிகாவை குளியலறைக்கு அழைத்துச் சென்று உடைந்த கண்ணாடி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர், இளைய மகளையும் அதே பாணியில் படுக்கையறையில் வைத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் தனது நெருங்கிய உறவினர் இருவருக்கு, குழந்தைகளை கொன்றுவிட்டதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், வினயிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றிவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரவு 9.30 மணிக்கு வீடு திரும்பிய வினய் குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், சரோஜாவை கைது செய்துள்ளோம். விசாரணையின்போது அவர், என் கணவரை கண்டாலே என் மூத்த மகள் பயப்படுகிறாள். வினய் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதன் காரணமாகவே என் குழந்தைகளைக் கொன்று வினயிடமிருந்து அவர்களை காப்பாற்றியுள்ளேன் என்றார்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.