பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி ஜாஹிருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரிக்கு பத்ம ஸ்ரீ விருது: பாகிஸ்தானால் 50 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவர்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் குவாசி சஜித் அலி ஜாஹிருக்கு பத்ம ஸ்ரீ பட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் வழங்கினார்.

பாகிஸ்தானால் 50 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டவருமான குவாசி சஜித் அலி ஜாஹிர், கடந்த 1971-ம் ஆண்டில் நடந்த வங்கதேசப் போரில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வங்கதேசப் பிரிவினைக்கு உதவியவர். வங்கதேசத்தில் பாகிஸ்தான் செய்த மனிதநேயக் குற்றங்கள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து இந்திய ராணுவத்துக்கு அளித்தவர்.

பாகிஸ்தான் ராணுவத்தால் இன்றுவரை குவாசி சஜித் அலி ஜாஹிர் பெயரைக் கேட்டாலே கடும் விஷமாக முகத்தைச் சுளிப்பார்கள், வெறுப்பின் உச்சத்துக்குச் செல்வார்கள். இத்தனை ஆண்டுகளாக ஊடகத்தின் வெளிச்சத்துக்கும், வெளி உலகிற்கும் வராமல் இருந்த ஜாஹிர், பத்ம ஸ்ரீ விருதுக்கு அழைக்கப்பட்டதும் அனைவரும் வியப்புக்குள்ளாகினர்.

வங்கதேசப் பிரிவினைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய போரில் இந்திய உளவுத்துறைக்கு ஏராளமான உதவிகள் செய்தமைக்காக குவாசி சஜித் அலி ஜாஹிருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குவாசி சஜித் அலி ஜாஹிருக்கு 20 வயதாக இருந்தபோது, சியால்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தும் கொடுமைகள், துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைப் பார்த்து இந்தியாவுக்கு உதவ குவாசி சஜித் அலி ஜாஹிர் உதவ முன்வந்தார்.

இதற்காக பாகிஸ்தான் ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் குவாசி சஜித் அலி ஜாஹிர் வந்தார். ஆனால், ஜாஹிரை இந்திய ராணுவத்தினரும், உளவுத்துறையும் உடனடியாக நம்பவில்லை, பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகித்தனர். ஆனால், தன்னிடம் இருந்த நம்பகத்தன்மையான ஆவணங்களை இந்திய அதிகாரிகளிடம் வழங்கி வங்கதேசத்தை விடுவிக்க ஜாஹிர் கோரினார்.

இதையடுத்து ஜாஹிரை நம்பிய இந்திய ராணுவத்தினர் அவரை மிகுந்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உளவுத்துறை உதவி செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போராடும் கொரில்லா படையை வங்கதேசம் சார்பில் உருவாக்க ஜாஹிர் பயிற்சி அளித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக ஜாஹிர் வங்கதேசத்தில்தான் பாதுகாப்பாக இருந்து வருகிறார். பாகிஸ்தான் அரசில் குவாசி சஜித் அலி ஜாஹிர் பெயரைக் கேட்டால் இன்றுகூட வெறுப்பின் உச்சத்துக்குச் செல்வார்கள். 50 ஆண்டுகளாக ஜாஹிரை பாகிஸ்தான் தேடி வருகிறது, அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது.
வங்கதேச அரசு ஏற்கெனவே ஜாஹிருக்கு பீர் ப்ரோதக் மற்றும் ஸ்வதனதா பதக் ஆகிய இரு உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்தது. தற்போது இந்திய அரசு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி ஜாஹிரை கவுரவித்துள்ளது.

SCROLL FOR NEXT