ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பலோத்ரா நகரில் இருந்து ஜோத்பூரை நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். காலை 9.50 மணியளவில் பார்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பந்தியவாஸ் கிராமம் அருகே சென்றபோது, பேருந்தின் மீது எதிரே வந்த டேங்கர் லாரி வேகமாக மோதியது. இவ்விபத்து நிகழ்ந்த சில நொடிகளிலேயே இரு வாகனங்களிலும் தீப்பற்றியது.
இதனால் அங்கிருந்த பொதுமக்களால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. பின்னர், தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 22 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
டேங்கர் லாரி தவறான வழித்தடத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அதில் அவர் கூறியுள்ளார்.-பிடிஐ