குள்ளநரிக்கு மரணம் நெருங்கும்போதுதான், சிங்கத்தை நோக்கி ஓடும் அதுபோலத்தான் தெலங்கானா முதல்வரின் அரசியல் அஸ்தமனம் நெருங்குவதால்தான் பிரதமர் மோடியுடன் மோதுகிறார் என்று பாஜக எம்.பி. அரவிந்த் தர்மபுரி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில விவசாயிகள் பயிர்செய்த நெல்லை மத்திய அரசு கொள்முதல் செய்யவில்லை என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டினார். மத்திய அரசு தெலங்கானா நெல்லை கொள்முதல் செய்யக் கோரி வரும் 12ம் தேதி மாவட்டத் தலைநகர்களில் எல்லாம் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஆதரவுடன் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசலுக்கு வாட் வரியைக் குறைக்க முடியாது எனக் கூறி பிரதமர் மோடி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நிஜாமாபாத் பாஜக எம்.பி. அரவிந்த் தர்மபுரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் “ தெலங்கானாவில் விளைந்த நெல்லை எங்கு சென்று கொள்முதல் செய்வது எனக் கேட்டுமத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிடமுடியுமா.
குள்ளநரிக்கு சாவு நெருங்கும்போதுதான்,அது சிங்கத்தை நோக்கி ஓடும். சந்திரசேகர் ராவுக்கு அரசியல் அஸ்தமிக்கும் நேரம் வந்துவிட்டதால்தான், பிரதமர் மோடியுடனுடன் மோதுகிறார், மோடி அரசு குறித்து பொய்களைக் கூறுகிறார்.
மத்திய அரசு ஒருபோதும், தெலங்கானாவில் இருந்து நெல் கொள்முதல் செய்யமாட்டோம் எனக் கூறவில்லை. நாங்களும் விவசாயிகளுக்கு தவறான ஆலோசனை கூறி நெல் விவசாயம் செய்யாதீர்கள் எனக் கூறவில்லை. தெலங்கானா முதல்வர் தன்னுடைய வாக்குறுதியிலிருந்து தவறி மக்களை திசைதிருப்புகிறார். மக்கள் கவனத்தை திசைதிருப்பாதீர்கள். தலித் பந்துவை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தெலங்கானா மக்கள் யாரையும் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கவில்லை என்ற சந்திரசேகர் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுவரை மத்தியஅரசுக்கு தெலங்கானா அரசிடம் இருந்து எந்தப் பரிந்துரையும் வரவில்லை.
இவ்வாறு தர்மபுரி தெரிவித்தார்