தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியையும், அந்த அமைப்புகள் அனுப்பும் நிதியையும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச்சட்டத்தின் கீழ் கண்காணிக்க உள்துறை அமைச்சகம் ஏன் பணிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டத்திருத்தங்கள் என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது, இதனால் மனிதநேய உதவிகளையும், கல்வி, மருத்ததுவம் தொடர்பான சேவைகளையும் செய்வதில் கட்டுப்பாடு இருக்கிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டன.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வி்ல் விசாரி்க்கப்பட்டு வருகிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கான்வில்கர், “ என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியையும் அனுப்பும் நிதியையும் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் வராமல் ஏன் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், “ வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரும் நிதியின் மூலம் தேசத்தின் அமைதி பாதுகாப்பு, சிதைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிதி நக்சல்களை பயிற்சிஅளிக்க பயன்படுத்தப்படுகிறது எனத் தெரியவந்தது
இந்த விஷயத்தில் தேசத்தின் பாதுகாப்பு,ஒருமைப்பாடு அடங்கியுள்ளது. எதற்காக ஒருவர் வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு இங்கு பணம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையையும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடக்கத்திலிருந்து கண்காணிக்கிறது, நச்கல்களுக்கு பயிற்சி அளிக்க நிதி பயன்படுத்தப்படுகிறது”
இந்த என்ஜிஓக்களில் உள்ளவர்களுக்கு எவ்வாறு பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். பணம்பெறுவோர் ஆதார் எண் மூலம்தான் கண்காணிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் கொண்டுவந்ததன் நோக்கமே பதிவு செய்யப்படாத என்ஜிஓக்கள் இடைத்தரகராக இருந்து வெளிநாடுகளில்பணம் பெற்று உள்நாட்டில் பணம் வழங்கக்கூடாது என்பதைத் தடுக்கவே திருத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெறுவதற்கும், அனுப்புவதற்கும் 20 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கும் ஏஜென்ட் போல் மத்திய அரசு செயல்பட முடியாது. வெளிநாட்டில் பணம் அனுப்புவதை வெற்றிகரமாக ஊக்குவிக்கும் அளவுக்கு நீங்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தால், இங்கே 10 என்ஜிஓக்கள் நன்றாக வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பலாம் என்று கூறலாம்.ஆனால் இடைத்தரகர்களாக செயல்பட முடியாது” எனத் தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று செயல்படும் என்ஜிஓக்கள் செயலை வர்த்தகரீதியான செயல் என கூற முடியாது” எனத் தெரிவித்தார்
அதற்கு துஷார் மேத்தா பதில் அளிக்கையில் “ சட்டத்திருத்தம் கொண்டு வந்ததன் நோக்கமே, இந்த செயல்முறையை வலிமைப்படுத்த வேண்டும், வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
இந்த திருத்தங்கள்மூலம், வெளிநாட்டிலிருந்து பெறும் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசால் கண்காணிக்க முடிகிறது. சட்டவிதிகளை மீறி செயல்பட்ட 19ஆயிரம் என்ஜிஓக்கள் பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.