மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான நவாப் மாலிக்குக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிநடைபெற்று வருகிறது. இதனிடையே, அந்த மாநிலத்தின் சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருக்கும் நவாப் மாலிக், கடந்த வாரம் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸின் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு கீழே, "இந்தப் புகைப்படத்தில் பட்னாவிஸுக்கு அருகில் இருப்பது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஜெய்தீப் ராணா" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அடுத்த தினம் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், "அமைச்சர் நவாப் மாலிக்குக்கு, நிழல் உலக தாதாக்களுடன் இருக்கும் தொடர்பை விரைவில் அம்பலப்படுத்துவேன்" எனக் கூறியிருந்தார்.
அதன்படி, மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:
மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நிலம் ஒன்றினை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சலீம் படேல், மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி சர்தார் சஹாப் அலி கான் ஆகியோரிடம் இருந்து அடிமட்ட விலைக்கு அமைச்சர் நவாப் மாலிக் வாங்கியிருக்கிறார். இவர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும். இதுதொடர்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் அரசிடமும், போலீஸாரிடமும் வழங்கவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.