சுமார் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகளை மகாராஷ்டிராவை சேர்ந்த ரஹிபாய் சோமாபூபேரே பாதுகாத்து வருகிறார். விதைத் தாய் என்றழைக்கப்படும் அவருக்கு குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டம், கோம்பைனி கிராமத்தை சேர்ந்தவர் ரஹிபாய் சோமா பூபேரே (56). மகாடியோ கோலி பழங்குடி இனத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினர் மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். பருவமழையின்போது மட்டும் விவசாயத்தில் ஈடுபட்ட இவர்கள், மற்ற காலங்களில் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
வறட்சியின் காரணமாக ரஹிபாய் குடும்பத்தினரின் மானாவாரி விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் தரிசு நிலத்தை செழிப்பான நிலமாக மாற்ற முடிவு செய்து சிறிய பண்ணை குட்டையை உருவாக்கினார். நவீன வேளாண் நுட்பங்களை முழுமையாக கற்றிந்தார்.
ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய விதைகளை பாதுகாக்க தொடங்கினார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விதை வகைகளை ரஹிபாய் சேகரித்தார். அவரது விதை வங்கியில் தற்போது 200-க்கும் மேற்பட்டபாரம்பரிய விதைகள் உள்ளன. இதில் 60 வகையான காய்கனிகள், 15 வகையான நெல்களும் அடங்கும்.மேலும் சுயஉதவிக் குழுவைதொடங்கி உள்ளூர் வேளாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத் தினார்.
ரஹிபாயின் நாட்டு பயிர் வகைகள் வெள்ளம், நோய்க்கு தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்டவை. அதோடு ஊட்டச்சத்தும் நிறைந்தவை. ரசாயன உரமும் அதிக நீரும் தேவைப்படாது. அதோடு மண் வளத்தையும் பாதுகாக்கிறது. ரஹிபாயின் பாரம்பரிய விதைகளால் விளைச்சல் 30 % வரை அதிகரித்துள்ளது.மகாராஷ்டிர மக்கள் அவரை விதைத் தாய் என்று அழைக்கின்றனர்.
அவரது சாதனைகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் கடந்த ஆண்டு ரஹிபாய்க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ரஹிபாய்க்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து ரஹிபாய் கூறும்போது, "சிறு வயதில் எனது தந்தை என்னை வயல்வெளிக்கு அழைத்துச் செல்வார். பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகளை கற்றுத் தந்தார். வளர்ந்த பிறகு,எனது குடும்பத்தினர் தொழிலாளர்களாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதை பார்த்து வேதனை அடைந்தேன். 2 ஏக்கர் தரிசு நிலத்தை வளம் கொழிக்கும் தோட்டமாக மாற்றினேன்.
எனது அனுபவத்தை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டேன். எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.