மக்களவை, மாநிலங்களவையில் நேற்று அமைச்சர்கள் அளித்த பதில், எம்.பி.க்களின் கோரிக்கை உள்ளிட்டவற்றின் சுருக்கமான தொகுப்பு:
கத்தார் இந்தியர்களிடம் இருந்து 787 புகார்
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்:
இந்த ஆண்டில் கத்தாரில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம் இருந்து அரசுக்கு 787 புகார்கள் வந்துள்ளன.
வேலை வாய்ப்பு சம்பந்தமான புகாராக இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் அல்லது தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்துரைத்து தீர்வுக்கு வலியுறுத்துவார்கள்.
வெளிநாடுகளில் இந்திய தொழிலாளர்கள் கொடுமைக்கு உள்ளாவது அதிகரிக்கிறதா என்பதை திட்டவட்டமாக சொல்வதற்கில்லை.
சவுதி அரேபியாவிலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி வரை 630 புகார்கள் பெறப்பட்டுள்ளன. யுஏஇயிலிருந்து 383, ஓமனிலிருந்து 330 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி மோசம் செய்துள்ளதாக சில ஏஜெண்டுகள் மீது கடந்த 4 ஆண்டுகளில் 652 புகார்கள் வந்துள்ளன.
தொல்பொருட்கள் திருட்டு
கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களிலிருந்து கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பின் 100-க்கும் அதிகமான தொல்பொருட்கள் திருடு போயுள்ளன. இப்பொருட்கள் வெளிநாடுகளில் விற்கப்படுவது தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளில் சிபிஐ ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.
தமிழக காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படாத பல்வேறு கோயில்களிலிருந்து 48 பொருட்கள் திருடு போயுள்ளன. ஆவணங்களின்படி, 7 பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் நியூயார்க்கில் மட்டும் 712 கலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புராதன பொருட்கள் திருடு தொடர்பாக சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.
போராட்டத்தால் ரூ. 56 கோடி இழப்பு
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு:
ஜாட் வகுப்பினர் நடத்திய போராட்டத்தால், சொத்துகளுக்கு சேதம், ரயில்கள் ரத்து, டிக்கெட் ரத்து போன்றவற்றால் ரயில்வேக்கு ரூ. 55.92 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிய நிறுவனங்களுக்கும் பிஎப் சட்டம்
தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஊழியர்களை கொண்ட சிறு நிறுவனங்களையும் பிஎப் சட்ட விதிமுறையின் கீழ் கொண்டுவருவது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது. இதற்காக பிஎப் சட்டம் திருத்தப்படும்.
இப்போதைய நிலையில் 20 அல்லது அதற்குமேல் ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் பிஎப் சட்டத்தின் கீழ் வருகின்றன. முறைசாராத பிரிவில் உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட அரசு தீவிரமாக உள்ளது.