கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கை எடுத்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:
பண மதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தினர். இந்த இரண்டு நடவடிக்கையுமே இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை வெகுவாக பாதித்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8-ம் தேதி வரும்போதும் அது உலக பொருளாதார வரலாற்றில் மிக மோசமான கொள்கை முடிவாக பதிவாகிறது. இத்தகைய முடிவு உலகில் எங்குமே எடுக்கப்பட்டது கிடையாது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, கரன்சி அல்லாத டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பண மதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இருந்த கரன்சி புழக்கத்தைவிட தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.