இந்தியா

லக்கிம்பூர் கலவர வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும்: உபி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

லக்கிம்பூர் கலவர வழக்கு விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று உ.பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த கார் விபத்து மற்றும் கலவரத்தில் 4 விவசாயிகள், 3 பாஜக.வினர், பத்திரிகையாளர் ஒருவர் என 8 பேர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், 2 வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தை ஏற்று, இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று மீண்டும் விசாரணை நடந்த போது நீதிபதிகள் கூறியதாவது:

லக்கிம்பூர் கலவர வழக்கு விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். முடிந்தால், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கலாம். இதுகுறித்து உ.பி. அரசு பதில் அளிக்க வேண்டும்.

நாங்கள் எதிர்பார்த்தது போல் விசாரணை நடைபெற வில்லை. சரியான விசாரணை நடைபெறுகிறதா என்பதை பார்ப்பதற்காகதான் நாங்கள் இங்கிருக்கிறோம். இந்த வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக் கும் சிபிஐ தீர்வாகாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

விசாரணையின் போது உ.பி. அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறும்போது, ‘‘சம்பவம் தொடர்பான தடயவியல் அறிக்கை இன்னும் வரவில்லை. வரும் 15-ம் தேதி அந்த அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘லக்கிம்பூர் வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போன்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கார் புகுந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் ஆகிய வற்றை விசாரணைக்கான ஆதாரங் களாக எடுத்துக் கொள்வதற்கான சான்றும் அளிக்கப்படவில்லை’’ என்றனர்.

அதை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞர் சால்வே, ‘‘அனுமதி கிடைத்தவுடன் வீடியோவை ஆதாரமாக இணைத்துக் கொள் கிறோம். மேலும், விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக உ.பி. அரசின் கருத்தைக் கேட்ட பிறகு நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துகிறோம்’’ என்றார்.

இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. -பிடிஐ

SCROLL FOR NEXT