இந்தியா-சீன உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். மத்திய அரசு சூழ்ச்சி செய்து, இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா நேற்று அளித்த பேட்டியில், “ பிரதமர் மோடி சீனாவுக்கு நற்சான்று வழங்குவதை நிறுத்தவேண்டும். இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியிருப்பதை அமெரி்க்காவின் பென்டகன் அறிக்கை உறுதி செய்துள்ளது.
ஆக்கிரமி்ப்புகளை சீனா அகற்ற பிரதமர் மோடி கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அசாசுதீன் ஒவைசியும் ட்விட்டரில் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா-சீனா உறவுகள் குறித்தும், எல்லையில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்த வேண்டும். அனைத்துக் கட்சிக் எம்.பி.க்களையும் எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அழைத்துச் சென்று, மத்திய அரசு விளக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய இறையான்மை உறுதி செய்யப்பட்டு மக்களுக்கு எடுத்துக் கூறப்படும்.
தேவை ஏற்பட்டால், மக்களவை விதி 248ன் கீழ் எம்.பி.க்கள் அனைவரையும் அழைத்து ரகசியக்கூட்டத்தைக் கூட நடத்தலாம். ஆனால், சீனா குறித்த பிரதமர் மோடியின் மவுனம், மறுப்பு, இருட்டடிப்பு போன்றவை தன்னைத்தானை தோற்கடிக்கும் வகையில் இருக்கிறது. மோடியின் செயல் சீனா முன் நம்மை மேலும் பலவீனமாக்கும். உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாத சூழலை எங்களுக்கு இது உணர்த்துகிறது.
உள்நாட்டளவில் மக்களவை பிளவுபடுத்தியும், வேற்றுமையை உருவாக்கியும் மத்திய அரசு தேசத்தை பலவீனப்படுத்தி வருகிறது. உள்நாட்டளவில் மக்களுக்கிடையே இருக்கும் இந்த பிளவு, அண்டைநாடான சீனாவுக்கு மிகப் பெரிய லாபத்தைதான் கொடுக்கும்.
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி, முதல்வராக இருந்தபோது, எல்லையில் பிரச்சினையில்லை டெல்லியில்தான் பிரச்சினை என்று பேசியிருந்தார். இதற்கு முன்பு இருந்ததைவிட இப்போதுதான் இந்த வார்த்தை உண்மையாகிறது. முதல்வர் மோடி தேசியப்பாதுகாப்புக் குறித்துப் பேசினார், ஆனால், இப்போது, சீனாவின் பெயரைக் கூட பிரதமர் மோடி உச்சரிக்கவில்லை. என்ன நடந்தது
இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.