இந்தியா

உ.பி.யில் திருடப்பட்ட காங்கிரஸ் தலைவரின் குதிரை: 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசம் ராம்பூரில் திருடப்பட்ட காங்கிரஸ் தலைவரின் குதிரை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. எனினும், திருடியவரை உபி போலீஸாரால் பிடிக்க முடியவில்லை.

ராம்பூரில் காங்கிரஸின் விவசாயப் பிரிவின் மாவட்டத் தலைவராக இருப்பவர் ஹாஜி நாஜிஷ் கான். இவர் செல்லமாக வளர்த்து வரும் குதிரை, கடந்த நவம்பர் இரவில் காணாமல் போனது.

இதன் மீதானப் புகாரை நாஜிஷ் கான், பரேலி பகுதி ஏடிஜியின் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்க ராம்பூர் நகரக் காவல்நிலையப் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, தலைமைக் காவலர் விஜயேந்தர்சிங் உள்ளிட்ட இரண்டு காவலர்கள் குதிரையை தேடுவதில் இறங்கினர். அவர்களுக்கு அருகிலுள்ள காஷிபூர் கிராமத்தில் அக்குதிரை கிடைத்துள்ளது.

எனினும், குதிரையை திருடியவரை அப்போலீஸாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்திற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை காங்கிரஸின் தலைவரான ஹாஜி நாஜிஷ் கான் பாராட்டியுள்ளார்.

இதுபோல், முக்கியப் பிரமுகர்களின் கால்நடைகளை 24 மணி நேரத்தில் ராம்பூர் போலீஸார் கண்டுபிடிப்பது முதன்முறையல்ல. இதற்கு முன், சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆஸம்கானின் ஏழு எருமைகள் காணாமல் போயிருந்தன.

அப்போது, ஆளும் கட்சியான சமாஜ்வாதியின் நிறுவனருமான ஆஸம்கான், உ.பி.மாநில அமைச்சராகவும் இருந்தார். இதனால், உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து துவங்கிய தேடுதல் வேட்டை சர்ச்சையை கிளப்பியது..

எனினும், உ.பி. போலீஸார் எந்த சர்ச்சைகளையும் பொருட்படுத்தவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு எருமைகளையும் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கிலும் அந்த எருமைகளை திருடியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது. தற்போது ஊழல் வழக்கில் சிறையிலுள்ள ஆஸம்கானின் எருமைகள் சம்பவத்தையும் உ.பி.வாசிகள் புன்னகைத்தபடி நினைவு கூர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT