பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடிய மனைவி மீது கணவர்போலீஸில் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இஷான் மியான். இவரது மனைவி ரபியா ஷம்சி. இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
இந்நிலையில் கடந்த மாதம்24-ம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றி தொடர்பான புகைப்படத்தை தனது செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்துக் கொண்டாடியுள்ளார் ரபியா ஷம்சி.
இதையடுத்து மனைவியைக் கண்டித்து கஞ்ச் நகர் போலீஸில் இஷான் மியான்புகார் கொடுத்தார். பாகிஸ்தான் அணியை வெற்றியைக் கொண்டாடிய தனது மனைவிரபியா மீது வழக்கு தொடரவேண்டும் என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார். மேலும் செல்போன் ஸ்டேட்டஸின் ஸ்கிரீன்ஷாட்களையும் அவர்போலீஸ் எஸ்.பி.க்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ரபியா ஷம்சி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் போலீஸ் நிலையத்தில் இஷான் மியான் புகார் கொடுத்தபோது அதை போலீஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து போலீஸ் எஸ்.பி. அங்கித் மிட்டலின் உதவியை இஷான் நாடியுள்ளார். அதன் பின்னரே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று கூறும் ரபியா, பாகிஸ்தான் அணியின் வெற்றி புகைப்படங்களை தனது உறவினர்கள்தான் செல்போனில் பதிவேற்றியுள்ளனர் என்றும், தனக்கு இதுகுறித்து எதுவும்தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே ரபியா ஷம்சி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் எஸ்.பி.அங்கித் மிட்டல் தெரிவித்துள்ளார்.