இந்தியா

மாணவியை இழிவாக நடத்திய கேரள பேராசிரியர் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

கேரளாவில் தலித் மாணவியை இழிவாக நடத்திய பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மகாத்மா காந்தி பல்கலைக்கழகம். இந்தப்பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த தலித் வகுப்பைச்சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த2011-ம் ஆண்டு அதே துறையில் முனைவர் (பி.எச்டி) படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக அப்பல்கலைக் கழகத்தின் வாசலில் அந்த தலித் மாணவி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேனோ அறிவியல் துறைத் தலைவரான பேராசிரியர் கே. நந்தகுமார், தன்னை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாகவும், முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் அந்த மாணவி குற்றம்சாட்டினார். மாணவியின் இந்தப் போராட்டத்துக்கு கேரளாவில் உள்ள தலித் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, மாணவியின் புகார் குறித்துஉரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, பேராசிரியர் நந்தகுமாரை பணிநீக்கம் செய்து மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் சபு தாமஸ் நேற்று உத்தரவிட்டார். மேலும், அந்த தலித் மாணவி தமது முனைவர் படிப்பை முடிக்க உதவி வழங்கப்படும் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT