தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸுக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலர் 2-வது டோஸ் செலுத்திக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்போலோ டெலிஹெல்த் மூத்த மருத்துவர் முபாஷீர் அலி கூறும்போது, “பொதுமக்கள் சந்தேகம், தயக்கம் காரணமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கினாலோ தாமதப்படுத்தினாலோ புதிய வகை கரோனா வைரஸ் தொற்றுபரவுவதற்கான வாய்ப்பு அதிகம்உள்ளது. புதிய வகை வைரஸ்வேகமாக பரவும் திறன் கொண்டிருப்பதுடன் தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது.
விழிப்புணர்வு அவசியம்
எனவே, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும். கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
பரிதாபாத்தில் உள்ள ஓஆர்ஜிசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் சுந்தரி ஸ்ரீகாந்த் கூறும்போது, “கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்ப்பவர்களால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனா பரவலைதடுக்க முடியும். அப்படியே பரவினாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். சமுதாயத்தில் பிறருக்கு பரவுவதும் தடுக்கப்படும்.
இது மட்டுமல்லாமல், சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல்உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம்” என்றார். - பிடிஐ