ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மணீஷ் குரோவர் உள்ளிட்டோரை ரோத்தக்கிலுள்ள கோயிலில் விவசாயிகள் 7 மணி நேரம் சிறை வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணா முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர், ரோத்தக் நகருக்கு அருகிலுள்ள கிலோய் கிராமத்திலுள்ள கோயிலுக்கு நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியின், கேதார்நாத் கோயில் வருகை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதைப் பார்க்க அவர் சென்றுள்ளார். அவருடன் உள்ளூர் பாஜக தலைவர்களும் சென்றிருந்தனர். இதை அறிந்த விவசாயிகள் அங்கு சென்று கோயில் கதவை மூடி அவர்களை சிறை வைத்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் எங்களின் அனுமதியின்றி கோயிலுக்குள் மணீஷ் குரோவர் உள்ளிட்டோர் நுழைந்துள்ளனர். அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை வெளியே விடமாட்டோம்" என்றனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பலன் இல்லை.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கேப்டன் மனோஜ் குமார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேசி, மணீஷ் குரோவர் உள்ளிட்டோரை மாலை 5 மணிக்கு மீட்டார்.
முன்னதாக, மன்னிப்புக் கேட்டால்தான் வெளியே விடுவோம் என்று கூறியதால், கோயில் கோபுரத்தின் முதல் நிலைக்கு வந்தமணீஷ் குரோவர் உள்ளிட்டோர் கைகளைக் கட்டி மன்னிப்புக் கேட்டனர். அதன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. - பிடிஐ