பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததால் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.10-ம் குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை பல்வேறு மாநிலங்கள் குறைத்துள்ளன. அதேவேளையில் பஞ்சாப், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் இது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும், பருத்தி விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சண்டிகரில் உள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வீட்டு முன்பு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்ஏடி தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இதுகுறித்து சுக்பீர் சிங் பாதல் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், “முதல்வர் சன்னி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு பஞ்சாபிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கொள்ளையடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஊழல் காங்கிரஸ் அரசும் அதன் முதல் வரும் அமைதி வழியில் போராடி எஸ்ஏடி தொண்டர்கள் மீது தடியடி பிரயோகம் செய்துள்ளனர். 1984-ல் சீக்கியர்கள் படுகொலையில் ஈடுபட்ட ஜெகதீஷ் டைட்லர் போன்ற தலைவர்களை பாதுகாப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்த வேண்டும் எனவும் அகாலி தொண்டர்கள் முழக்கமிட்டனர்” என்று கூறியுள்ளார். -பிடிஐ