மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, தொழிலதிபர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தர தேஷ்முக் வற்புறுத்தியதாக மும்பை காவல் முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தால் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த 1-ம் தேதி அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை கைது செய்த்து. 6-ம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்த மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை காவல் முடிவடைந்த நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
விசாரணை காவலை மேலும் 9 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை நிராகரித்த நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை வட்டாரங் கள் கூறும்போது, “அனில் தேஷ்முக் அவரது மகன்கள் சாலில், ரிஷிகேஷ் ஆகியோர் 27 நிறுவனங்களை நடத்தி உள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் பண மோசடிகள் நடைபெற்றுள்ளன. அனில் தேஷ்முக் மற்றும் அவரது நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. தேஷ்முக்கின் 2 சொத்துகளை முடக்கியுள்ளோம்” என்று தெரிவித்தன. -பிடிஐ