ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பங்கேற்றார். அப்போது அவரும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இணைந்து “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
புதிய திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசும்போது, “சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பசுமை சூழலைப் பாதுகாக்க சூரிய மின் சக்திக்கு மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டம் பாதை அமைத்து கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். அவரது முயற்சியால் கடந்த 2015 நவம்பர் 3-ம் தேதி சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ) உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் செயல் படுகிறது. இந்த கூட்டமைப்பில் 124 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகம் முழுவதும் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஐஎஸ்ஏ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோகம்” திட்டம் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த பின்னணியில் கடந்த 2-ம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐஎஸ்ஏ கூட்டத்தில் “ஒரே சூரியன் பிரகடனம்” என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள் புதிய திட்டத்தை முன்னின்று வழிநடத்த உள்ளன. ஜெர்மனி, ஜப்பான் உட்பட 80 நாடுகள் திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்துள்ளன.
முதல் கட்டத்தில் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் சூரிய மின் விநியோக திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. 2-வது கட்டத்தில் ஆப்பிரிக்க நாடு கள், 3-வது கட்டத்தில் உலகம் முழுவ தும் சூரிய மின் சக்தி இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
புதிய திட்டம் குறித்து ஐஎஸ்ஏ பொது இயக்குநர் அஜய் மாத்தூர் கூறும்போது, “வரும் 2050-ம் ஆண்டுக்குள் 2,600 ஜிகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப் படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.19,36,503 கோடி மிச்சமாகும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார்.
திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சூரிய மின் சக்தியை அளவிடும் தொழில்நுட்பம் விரை வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் எந்தெந்த நாட்டில் எவ்வளவு சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கிட முடியும்.
ஐஎஸ்ஏ வெளியிட்ட அறிக்கை யில், “சர்வதேச அளவில் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப் படும். பல நாடுகளை இணைக்கும் வகையில் நீண்ட தொலைவு மின் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். உலக நாடுகள் சூரிய சக்தியை பகிர்வதன் மூலம் அமைதியான, ஒளிமயமான, வளமான உலகத்தை உரு வாக்க முடியும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
“ஒரே சாலை, ஒரே மண்டலம்” என்ற பெயரில் 64-க்கும் மேற்பட்ட நாடுகளை கடல், சாலை, ரயில் வழியில் இணைக்க சீனா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.