அபிநந்தன் 
இந்தியா

அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி: இந்திய விமானப் படை ஒப்புதல்

செய்திப்பிரிவு

கடந்த 2019-ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட வான் சண்டையில் எதிரியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்க இந்திய விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த 2016 பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது. மறுநாள் இதற்கு பதிலடியாக இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது, அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது இந்திய விமானப் படையின் விங் கமாண்டரான அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் தவறிவிழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. இந்த சம்பவங்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பிறகு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அபிநந்தனை 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் விடுவித்தது.

அப்போது இந்தியர்களின் மனதில் நிஜ ஹீரோவாக அபிநந்தன் உயர்ந்தார். அவருக்கு கடந்த ஆண்டு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் அபிநந்தன் வர்த்தமானுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்க இந்தியா விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட நடைமுறை முடிந்ததும் அவர் பதவி உயர்வு பெறுவார் எனவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நடைமுறை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “எந்தவொரு அதிகாரியும் புதிய பதவிக்கான ஒப்புதல் பெற்ற பிறகு, அப்பதவிக்கான காலியிடம் ஏற்படும்போது அதைப் பெறுவார்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT