இந்தியா

இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே பஞ்சாபில் விவசாய நிலத்தில் டிபன் பாக்ஸ் குண்டு அகற்றம்

செய்திப்பிரிவு

இந்திய - பாகிஸ்தான் இடையே பஞ்சாபில் எல்லைப் பகுதியில் விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டம் ஜலாலாபாத் பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஞ்சித் சிங் என்பவரை சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், பல்வந்த் சிங் ஆகிய இருவர் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெரோஸ்பூரில் உள்ள அலி கே கிராமத்தில் இருக்கும் வயல்வெளியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை தாங்கள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன்படி, அங்கு சென்ற போலீஸார் அந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். -பிடிஐ

SCROLL FOR NEXT