இந்தியா

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியிடம் 22-ம் தேதி முதல் குறுக்கு விசாரணை

பிடிஐ

மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறிய தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் வரும் 22-ம் தேதி முதல் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.

கடந்த 2008 நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவினர். ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தியதில் 164 பேர் பலியாயினர். 308 பேர் படுகாயம் அடைந்தனர். மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த வழக்கில் பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான டேவிட் ஹெட்லி முக்கிய குற்றவாளி என்று விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் அமெரிக்கா புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஹெட்லியை கைது செய்தனர். தீவிரவாத தாக்குதல் வழக்கில் அங்கு அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகசிய இடத்தில் அவரை காவலில் வைத்துள்ளனர்.

மேலும், மும்பை வழக்கில் அவர் அப்ரூவராக மாறியதால், அமெரிக்காவில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தொடர்ந்து ஒரு வாரம் ஹெட்லி அளித்த வாக்கு மூலத்தில் பல அதிர்ச்சி தகவல்களை கூறியிருந்தார். மும்பை தாக்குதலில் லஷ்கர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அல் கய்தா தீவிரவாதிகளின் சதி குறித்து விரிவாக கூறியிருந்தார். குஜராத்தில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண் இஷ்ரத் ஜகான் தற்கொலைப் படை தீவிரவாதிதான் என்றும் ஹெட்லி உறுதியாக கூறினார்.

இந்நிலையில், ஹெட்லியில் வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 4 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான அபு ஜூண்டாலின் வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சில் வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஹெட்லி மீண்டும் ஆஜராவது குறித்தும், அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது குறித்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தேவைப்பட்டால் ஹெட்லியிடம் அரசு தரப்பில் மறு விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT