பாஸ்போர்ட் வைப்பதற்காக ஆன்லைனில் ‘பவுச்’ எனப்படும் பாஸ்போர்ட் உறை ஆர்டர் செய்தவருக்கு கவருடன் ஓரிஜினல் பாஸ்போர்ட்டும் வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வர்த்த நிறுவனமான அமேசானில் பாஸ்போர்ட் உறை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது.
கவரை பிரித்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்துந்தது. அமேசான் அனுப்பிய உறையில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் ஒன்று இருந்துள்ளது. ஒரிஜினல் பாஸ்போர்ட் எப்படி அமேசான் பார்சலில் வந்தது என்று அவர் குழம்பிபோனார்.
பின்னர் அவருக்கு வந்த பாஸ்போர்ட்டை பிரித்து பார்த்தபோது அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என தெரிய வந்தது. அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவில் இதுபற்றி மிதுன் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
பின்னர் பாஸ்போர்ட் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை தொடர்பு கொண்ட மிதுன், முகமது சலீமன் பாஸ்போர்ட் அமேசான் மூலம் தனக்கு வந்த விவரத்தை கூறியுள்ளார்.
அப்போது தான் தனது பாஸ்போர்ட் மிதுனிடம் இருக்கும் விவரம் முகமது சலீமுக்கும் தெரிய வந்தது. எப்படி இந்த குழப்பம் ஏற்பட்டது என்ற இருவரும் அதிர்ந்து போயினர். பின்னர் தான் விவரம் தெரிய வந்தது.
முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதேச அமேசான் நிறுவனத்தில் பாஸ்போர்ட் உறை ஒன்று ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். புதிய பாஸ்போர்ட் உறையில் தனது பாஸ்போர்ட்டை வைத்து அது சரியாக இருக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் உறை பொருத்தமானதாக இல்லாமல் சிறியதாக இருந்துள்ளது. இதனால் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் உறை பிடிக்காமல் அதை மீண்டும் அமேசான் நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
திருப்பி அனுப்பும் போது உறையில் வைத்து பார்த்த உண்மையான பாஸ்போர்ட்டை எடுக்காமல் மறதியாக அப்படியே அனுப்பி விட்டார். தனது ஒரிஜினல் பாஸ்போர்ட் வீட்டில் இருப்பதாகவே எண்ணியுள்ளார்.
சலீம் வேண்டாம் என திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை, பாஸ்போர்ட் உறை ஆர்டர் செய்த மற்றொரு நபரான மிதுனுக்கு அமேசான் ஊழியர்கள் அனுப்பி வைத்துள்ளனர். முகமது சலீமிடமிருந்து ரிட்டன் வந்த பாஸ்போர்ட் உறையை மறுசோதனை செய்யாமல் அதே கவரை மிதுனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் சலீமின் உண்மையான பாஸ்போர்ட் உறை ஆர்டர் செய்த மிதுன் வசம் சென்றுள்ளது. மிதுன் பிரித்து பார்த்தபோது தான் அதில் உண்மையான பாஸ்போர்ட் இருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.