பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

தேயிலைத் தோட்ட பழங்குடியின மாணவர்களுக்கு 27 மருத்துவ இடங்கள்: அசாம் அரசு ஒப்புதல்

செய்திப்பிரிவு

அசாம் அரசு நடத்தும் 8 மருத்துவக் கல்லூரிகளில் தேயிலை தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக 27 இடங்களை ஒதுக்குவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் 803 பெரிய தோட்டங்கள் மற்றும் பல சிறிய தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு பல காலமாக பழங்குடி சமூகத்தினர் தேயிலை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போது வேலைவாய்ப்புக்கான கல்வியில் புதிய வாசல்களை அசாம் அரசு திறக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:

"தேயிலைத் தோட்ட சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் (இளங்கலை பல் அறுவை சிகிச்சை) இடங்கள் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு மற்றும் பராக் பள்ளத்தாக்குக்கு விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் சமூகத்தினருக்கு 24 எம்பிபிஎஸ் மற்றும் மூன்று பிடிஎஸ் இடங்களை ஒதுக்க அமைச்சரவை முடிவு செய்தது.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 இடங்களும், பராக் பள்ளத்தாக்குக்கு ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், இளங்கலை பல்மருத்துவ சிகிச்சை பிரிவில் (BDS) பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குக்கு இரண்டு இடங்களும், பராக் பள்ளத்தாக்கிற்கு ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளன.''

இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

தேயிலைத் தோட்டங்களுடன் தொடர்புடைய பழங்குடியின மக்கள் காங்கிரஸுக்குப் பிறகு தற்போது பாஜவுக்கு ஆதரவு தரும் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT