பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 24 பேர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. பிஹார் மாநிலம் கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக நேற்று நவம்பர் 4 ஆம் தேதியன்று மேற்கு சம்பரான் மாவட்டத்தின் தெலுவா கிராமத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இருவேறு இடங்களில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உயிரிழப்புக்கான காரணம் கள்ளச்சாராயம் தானா என்பதை அரசு நிர்வாகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. போலீஸாரும், விஷம் கலந்த கலவையைக் குடித்ததால் நேர்ந்த மரணம் என்றே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் கிராமவாசிகளோ சமர்தோலி பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் அருந்தி வந்தனர். அவர்களின் நிலை சில நிமிடங்களில் மோசமானதால் நாங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம் ஆனால், அங்கே அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து உயிர் பிரிந்தது என்று கூறுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் பிஹாரில் இதுபோன்ற கள்ளச்சாராய சாவு சம்பவம் நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஹாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அதனாலேயே அங்கு அவ்வப்போது கள்ளச்சாராய சாவ் நடப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி இது குறித்துப் பேட்டியளித்த முதல்வர் நிதிஷ் குமார், "மது என்பது மிகவும் மோசமானது என்பதாலேயே நாங்கள் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினோம். கலப்பட மதுவை அருந்தினால் அதன் பாதிப்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். மதுவிலக்கை பிஹார் மக்களில் பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர். வெகு சிலரே அதனை எதிர்க்கின்றனர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.