இந்தியா

கான்பூரில் புதிதாக 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி: தொற்று எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜிகா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியது. உத்தரப் பிரதேசத்தில் ஜிகா மேலாண்மைக்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று கான்பூர் நகரில் புதிதாக 30 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 66 ஆக அதிகரித்துள்ளது.

ஜிகா வைரஸ் அதிகாலை அல்லது மாலையில் வலம்வரும் ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் கடிப்பதால் வருகிறது. இதே ஏடிஸ் கொசுக்கள்தான் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களையும் உருவாக்குகின்றன. “பொதுவாக, தேங்கி நிற்கும் நன்னீரில்தான் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே, பாத்திரம், பழைய டயர் என எங்கும் நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . முட்டையாக இருக்கும்போதே கொசுக்களை அழித்துவிட வேண்டும்.

ஒரு மனிதரின் உடலுக்குள் ஜிகா வைரஸ் வந்துவிட்டால் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் மட்டுமே ஆற்றலுடன் இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாளிலேயே அறிகுறிகள் தென்பட்டுவிடும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தடிப்புகள், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுக்களில் வலி, உடல்சோர்வு ஆகியவற்றை உணர்வதாகச் சொல்கிறார்கள். இதில் உடல் தடிப்பு போக, பிற அறிகுறிகள் கரோனாவோடு ஒத்துப்போவதால் நோய்த் தொற்றாளர், தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா அல்லது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா எனத் தடுமாறுவது உண்டு.

ஆபத்து அதிகம் இல்லை

அதேநேரம், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஜிகா வைரஸ் அடிப்படைக் குணநலன்களில் முற்றாக மாறுபட்டது. கரோனாவைப் போல் தொற்றுக்குள்ளானவரைத் தொடுவதால் ஜிகா வைரஸ் பரவாது. காற்றிலும் பரவாது. கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலமே ஜிகா வைரஸிடமிருந்து தப்ப முடியும்.

SCROLL FOR NEXT