இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி சொற்பொழிவாற்றிய எதிர்க்கட்சிகள் எங்கே போயின? கர்நாடகா பாஜக கேள்வி

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி சொற்பொழிவாற்றிய எதிர்க்கட்சிகள் இப்போது எங்கேபோயின என கர்நாடக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை, மாநில அரசுடன் கூடிய வாட் வரிக் குறைப்பையும் சேர்த்து பாஜக ஆளும் மாநிலங்கள் உடனடியாக அமல்படுத்திவிட்டன. ஆனால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் தான் இன்னும் அமல்படுத்தவில்லை என கர்நாடகா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து,பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கர்நாடகாவில், மத்திய அரசின் வரிக் குறைப்போடு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.13.30 குறைத்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 க்கு விற்பனை செய்கிறது. அதேபோல் டீசல் விலை கலால் வரிக் குறைப்போடு கர்நாடக அரசு வாட் வரியைக் குறைத்து லிட்டர் ரூ.85.03க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் தான் கர்நாடக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று பிரதமர் மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. இதனை உடனடியாக பாஜக ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்தின. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி சொற்பொழிவாற்றிய எதிர்க்கட்சிகள் இப்போது எங்கேபோயின என கர்நாடக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களிலேயே மத்திய அரசின் கலால் வரிக் குறைப்பை உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்தது கர்நாடக அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT