நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 107.63 கோடியைக் கடந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,90,920 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 107.63 கோடியைக் (1,07,63,14,440) கடந்தது. 1,08,50,694 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,054 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,12,794 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.23 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து 130 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,885 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,48,579 ஆக உள்ளது; கடந்த 253 நாட்களில் இது குறைந்த அளவு. நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.43 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 10,67,914 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 61.23 கோடி கொவிட் பரிசோதனைகள் (61,23,46,767) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 41 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.17 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.21 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 66 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 31 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.